Speech
Lawrence Wong  ·  2026-08-08 00:00

8 August 2026National Day Message 2026 (Tamil)PeoplePrime Minister's OfficeTopicsEconomyFamilies and communitiesGovernanceMinister of State, Ministry of Culture, Community and Youth and Ministry of Manpower, Dinesh Vasu Dash delivered Prime Minister and Minister for Finance Lawrence Wong's National Day Message 2026 in Tamil. The message was recorded at the National Stadium and telecast on 8 August 2026.National Day Message

Minister of State, Ministry of Culture, Community and Youth and Ministry of Manpower, Dinesh Vasu Dash delivered Prime Minister and Minister for Finance Lawrence Wong's National Day Message 2026 in Tamil. The message was recorded at the National Stadium and telecast on 8 August 2026.

என் சக சிங்கப்பூரர்களே,

ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று, நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்ப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும் ஒன்றுகூடுகிறோம்.

இந்த ஆண்டு, நாம் மேலும் நிச்சயமற்ற உலகச் சூழ்நிலைக்கு இடையில் சந்திக்கிறோம்.

பூசல்களும் வர்த்தகத் தடைகளும் அதிகரித்துள்ளன. நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை குறைந்துள்ளது. முன்பு, வழக்கமாகக் கருதப்பட்ட ஒத்துழைப்பு உணர்வை, இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மத்திய கிழக்கு பிரச்சினை வழியாக நாம் இதனை நேரடியாக உணர்ந்துள்ளோம். அங்குள்ள நிலைமை பதற்றமாகவே உள்ளது.  அதேவேளையில், இந்தப் பூசலின் தாக்கம் உலகம் முழுவதும் தொடர்கிறது - அதிகரித்துவரும் எரிசக்தி விலை, தடைப்பட்ட விநியோகத் தொடர்கள், குடும்பங்களுக்கும் தொழில்களுக்கும் அதிகரித்துவரும் செலவுகள்.

சவால்கள் இருப்பினும், சிங்கப்பூரின் பொருளாதாரம் தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, இவ்வாண்டு முதல் பகுதியில், நாம் வலுவான வளர்ச்சியைக் கண்டோம். இந்த வேகம் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். நம் ஊழியர் சந்தை தொடர்ந்து நிலையாக உள்ளது. புதிய வேலைகள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. பெருகிவரும் செயற்கை நுண்ணறிவால் நாம் பயனடைந்து வருகிறோம் - குறிப்பாக, பகுதி மின்கடத்தித் துறைகளில். ஆனால், உலகளாவிய அரசியல் சூழல் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. இதனால், பல சிங்கப்பூரர்கள் தங்கள் வேலைவாய்ப்புகள், குடும்பங்கள், எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படும் என்று கவலை கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

நம் எல்லைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நம் செயல்பாடுகளை நம்மால் கட்டுப்படுத்தமுடியும். நாம் எப்போதும் சிங்கப்பூரர்களுக்குத் துணைநிற்போம். மத்திய கிழக்கில், நம் மக்கள் சிக்கித் தவித்த நிலையில், நாம் அவர்களை மீண்டும் சிங்கப்பூருக்கு அழைத்து வந்தோம். நெருக்கடிகாலத்தில், குடும்பங்களுக்கும் தொழில்களுக்கும் நாம் விரைந்து ஆதரவளித்தோம். தொடரும் நிச்சயமற்ற சூழலைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் பொருட்டு, அண்மையில்தான், நாம் மேலும் நடவடிக்கைகளை அறிவித்தோம்.Â

ஆனால், நம் பொறுப்பு, இன்றைய சவால்களுக்கும் அப்பாற்பட்டது. எதிர்காலத்தை முன்னிட்டு சிங்கப்பூரை நாம் இப்போதே தயார்செய்யவேண்டும்.Â

இவ்வாண்டு முதல் பகுதியில், நமது பொருளியல் உத்திகளை விரிவாக மறு-ஆய்வு செய்து முடித்தோம். அதன் அடிப்படையில், வர்த்தக, தொழில்துறைகளுக்கான அணுகுமுறையைப் புதுப்பிக்கிறோம்; போட்டித்தன்மையை வலுப்படுத்துகிறோம்; நம் மக்களில் அதிகமாக முதலீடு செய்கிறோம். நம் இலக்கு, தற்போதைய நெருக்கடியைச் சமாளிப்பது மட்டுமன்று. எதிர்காலத்தில் எது வந்தாலும், நாம் மேலும் வலிமையாக இருக்கவேண்டும்; கூடுதல் மீள்திறனுடன் செயல்படவேண்டும்; சிறந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.Â

நம் உலகை மாற்றியமைக்கும் மிகப் பெரிய மாற்றங்களில் ஒன்று, அதிவேகமான புத்தாக்கம். சவால்களும் ஐயங்களும் தொடர்ந்திருந்தாலும்கூட, சில ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணிப்பார்க்கக்கூட முடியாத வாய்ப்புகளை, புதிய கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தித் தருகின்றன. பிறர் முன்னேறிச் செல்லும்போது, நாம் பின்தங்கிவிடக் கூடாது. எனினும், நாம் எல்லாப் புதிய தொழில்நுட்பங்களையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

சிங்கப்பூர், நமது சூழலுக்கேற்ப இத்தகைய மேம்பாடுகளை அரவணைக்கும். மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய, சமூகங்களை வலுப்படுத்தக்கூடிய, வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய கருவிகளாக அவை இருப்பது அவசியம்.Â

உதாரணத்திற்கு, செயற்கை நுண்ணறிவு. அது தொழில்துறைகளை உருமாற்றி, நாம் வேலை செய்யும் முறையை மாற்றியமைத்து வருகின்றது. ஆனால், அது அதிக ஊழியர்களிடையே தங்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்ற கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. சிங்கப்பூரில், நாம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, உற்பத்தித்திறனை அதிகரிப்போம்; மேம்பட்ட வேலைகளை உருவாக்குவோம். அதேவேளையில், நாம் திறன்களிலும் பயிற்சிகளிலும் முதலீடு செய்வோம் – ஒவ்வோர் ஊழியருக்கும் ஆதரவளிக்கும் வகையில்.Â

இது சமூக ஊடகத்திற்கும் பொருந்தும். நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வதற்கும், எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் அவை துணைபுரிகின்றன. ஆனால், குழந்தையர், இளையர்மீது அவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றிப் பெற்றோர்க்கு அக்கறை உள்ளது. அது நியாயமான அக்கறைதான் - குறிப்பாக, பிள்ளைகளின் மனநலன், உறவுமுறை, ஆரோக்கியமான வளர்ச்சி போன்றவற்றில்.

தொழில்நுட்பம் மாறும்போது, அவை நம் மக்களுக்குச் சேவையாற்றி, சமுதாயத்தை வலுப்படுத்த உதவும் வகையில், நாம் அவற்றைச் சீரமைப்போம்.

இறுதியில், பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்ப முன்னேற்றமும் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும். மக்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியங்களைத் தொடரவும், மனநிம்மதியுடன் குடும்பங்களைப் பேணவும், நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்நோக்கவும், சிங்கப்பூர் ஒரு சிறந்த இடமாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்.Â

உலகம் முழுவதும், குடும்ப வாழ்க்கையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த தொடக்கத்தை அளிக்க விரும்புகின்றனர். அதனால், அவர்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதேபோல, பலர் தங்கள் வேலையையும் மூப்படையும் பெற்றோரையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்கின்றனர்.Â

சிங்கப்பூரிலும், இதுபோன்ற கவலைகள் இருப்பதை அறிகிறோம். பல குடும்பங்கள், இத்தகைய தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் சிரமப்படுகின்றன.Â

அதனால்தான், நாங்கள் புதிய கண்ணோட்டத்துடன் செயல்படுகிறோம். குடும்பங்களை ஆதரிப்பதற்காக மிகப் பெரிய மறு-ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். திருமணம், பிள்ளைப்பேறு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவு வழங்க விரும்புகிறோம். பிள்ளை வளர்ப்புச் செலவு, கட்டுப்படியான குழந்தைப் பராமரிப்பு, பிள்ளைப் பராமரிப்பு போன்றவற்றில் குடும்பங்களின் சுமையைக் குறைக்க முயல்வோம். இவை பற்றி தேசிய தினக் கூட்ட உரையில் மேலும் பகிர்ந்துகொள்ளப்படும்.Â

ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்கு இன்னும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கப் பங்காற்றவேண்டும். நம் முன்னோரின் தியாகம், கடின உழைப்பு, தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு சிங்கப்பூரை நாம் ஈன்றெடுத்தோம். இப்போது, நாம் அந்த மரபை முன்னெடுத்துச் சென்று, அதைவிட வலிமையான சிங்கப்பூரை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வது நமது பொறுப்பாகும்.Â

சுதந்திரம் முதல், சிங்கப்பூர் நீண்டகால இலக்குகளையே பின்பற்றியுள்ளது. நாம் ஆண்டு அடிப்படையில் சிந்திக்காமல், பல்லாண்டு கால அடிப்படையில் சிந்தித்து வந்துள்ளோம். நாம் தொடர்ந்து, நம் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்வோம்; குறைந்த நிலப் பரப்பைத் திறம்படப் பயன்படுத்துவோம்; எதிர்கால உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வோம்.

ஆனால், வருங்காலம் என்பது உள்கட்டமைப்பு சார்ந்தது மட்டுமல்ல. நாம் புதிய சிந்தனைகளை நாடுவோம். உலகளாவியத் தொடர்புகளை உருவாக்கவேண்டும். நம் சமுதாயத்திற்குப் பங்களித்து, சிங்கப்பூரைத் தம் இல்லமாக்கிக்கொள்ள விரும்புவோரை வரவேற்கவேண்டும்.

சிங்கப்பூர் போன்ற சின்னஞ்சிறு தீவு, உலகத்தோடு தொடர்புகொண்டிருப்பது கட்டாயம். நிச்சயமற்ற சூழல்களில், நாடுகள் தனித்து செயல்பட எண்ணக்கூடும். ஆனால், சிங்கப்பூர் அவ்வாறு செயல்பட முடியாது. நம் வரலாறு முழுவதும், நமது பரந்த மனப்பான்மை நமக்குத் துணைநின்றுள்ளது. வரும் ஆண்டுகளிலும், நம் வெற்றிக்கு அது இன்றியமையாத ஒன்றாகும்.

பலதரப்பட்ட சிங்கப்பூரர்கள், ஒரு மக்களாக, ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயல்படுவதே நம் கதை.

60 ஆண்டுக்கு முன்னர், அந்தக் கடப்பாடு நம் உறுதிமொழியில் வெளிப்பட்டது. ‘நாம் இனம், மொழி, மதம் பாராது, சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் ஒருமித்த உறுதிப்பாட்டைக் கொண்டிருப்போம். அதன்மூலம், ஒரு தேசமாக உருமாறுவோம்.’ அதுதான், எளிய – ஆனால், வலிய நம்பிக்கை!

இன்று, உலகம் பிளவுபட்டுள்ளது. இருப்பினும், நம் உறுதிமொழியின் விழுமியங்கள் தொடர்ந்து நமக்குப் பொருந்தும்.Â

நமக்கான சவால்கள் உண்மையானவை. நம் மீள்திறன், வெளிப்படையான சிந்தனை, ஒற்றுமை ஆகியவை நம் வலிமை. அதுவும் உண்மையே. நாம் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு, நம் உறுதிமொழியில் மாறாது பற்று கொண்டிருந்தால்தான், நாம் ஒரு மேம்பட்ட, மேலும் வலிமையான சிங்கப்பூரை ஒன்றிணைந்து உருவாக்குவோம்!Â

இனிய தேசிய தின வாழ்த்துகள்! மாஜுலா சிங்கப்பூரா!

National Day Message 2026 (Malay)

National Day Message 2026 (Mandarin)